இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொது வினியோகத்திட்டம் மிக சிறப்பு - புள்ளி விவரங்களை செதுக்கிய அமைச்சர்!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொது வினியோகத்திட்டம் மிக சிறப்பு - புள்ளி விவரங்களை செதுக்கிய அமைச்சர்!

Update: 2020-12-22 08:39 GMT

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பொது வினியோகத்திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

கூட்டுறவுத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு 2011 முதல் 30.11.2020 வரை 67,371 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.281.75 கோடி அளவிற்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2011 முதல் 30.11.2020 வரை சிறு வணிகக் கடனாக 16,50,832 பயனாளிகளுக்கு ரூ.2,182.28 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுயஉதவிக்குழு கடனாக 4,25,440 குழுக்களுக்கு ரூ.7,865.30 கோடியும், மகளிர் தொழில் முனைவோர் கடனாக 1,42,346 நபர்களுக்கு ரூ.624.27 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் 23,482 முழுநேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 9,525 பகுதிநேர கடைகள் என மொத்தம் 33,007 நியாயவிலைக் கடைகள் மூலம் 1,88,97,350 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2011 முதல் 30.11.2020 வரை 681 முழுநேர கடைகள், 1,783 பகுதிநேர கடைகள் என மொத்தம் 2,464 நியாயவிலைக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

2011 முதல் 30.11.2020 வரை 1,237 முழுநேர கடைகள், 749 பகுதிநேர கடைகள் என மொத்தம் 1,986 நியாயவிலை கடைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பொது வினியோகத்திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நியாயவிலைக் கடைகளின் இருப்பு விவரங்கள் உள்ளிட்ட பொதுவினியோகத் திட்ட செயல்பாடுகள் அனைத்தும் கணினி மூலம் கண்காணிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

Similar News