தியேட்டர் உரிமையாளர் துப்பாக்கி சூடு.. ஒருவர் உயிரிழப்பு.. கொலை வழக்குப்பதிவு.!

தியேட்டர் உரிமையாளர் துப்பாக்கி சூடு.. ஒருவர் உயிரிழப்பு.. கொலை வழக்குப்பதிவு.!

Update: 2020-11-17 09:30 GMT

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அக்கரைப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் 60, விவசாயி ஆவார். பழனி ரயில்வே பீடர் சாலை, அப்பர் தெருவை சேர்ந்தவர் நடராஜன் 80, தியேட்டர் உரிமையாளர் ஆவார்.

இந்த இரண்டு பேருக்கும் இடையே பழனி பீடர் சாலையில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக கடந்த சில காலமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, அந்த நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில் இளங்கோவன் ஈடுபட்டார். இதற்காக நேற்று காலை 10.15 மணி அளவில் நிலத்தை சுத்தப்படுத்தும் பணியில் இளங்கோவனின் உறவினர்களான பழனி கவுண்டன்குளம் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த பழனிசாமி 72, சத்திரப்பட்டி அருகே உள்ள ராமப்பட்டினம் புதூரை சேர்ந்த சுப்பிரமணி 57, உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர்.

இதுபற்றி அறிந்த நடராஜன் அங்கு சென்று தகராறு செய்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுப்பிரமணியனையும், பழனிசாமியையும் அடுத்தடுத்து சுட்டார். துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 2 பேரும் சாலையில் மயங்கி விழுந்தனர். இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஒருவர் கற்களை எடுத்து நடராஜன் மீது எறிந்தார். அவரையும், நடராஜன் சுட முயன்றார். உடனே அந்த நபர் அருகில் இருந்த மண் குவியலின் பின்புறம் சென்று மறைந்து தப்பி கொண்டார்.

துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு பழனிசாமி தொடையில் பாய்ந்த துப்பாக்கி குண்டை டாக்டர்கள் அகற்றினர்.

சுப்பிரமணி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர் நடராஜன் தனது துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த சுப்பிரமணி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 

முன்னதாக பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் சம்பவத்தை கூறி நடராஜன் சரண் அடைந்தார். துப்பாக்கியையும் ஒப்படைத்தார். நடராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்த புகாரின் பேரில் நடராஜன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 


தியேட்டர் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பழனி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.
 

Similar News