500 டன் பாலம் பட்டப்பகலில் திருடுபோனது எப்படி: போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Update: 2022-04-10 12:15 GMT

பீகாரில் சுமார் 500 டன் எடை கொண்ட பாலம் ஒன்று திருடப்பட்டுள்ள சம்பவத்தில் கொள்ளையர்கள் அரசு அதிகாரிகள் என்று சொல்லி கிராம மக்களை நம்ப வைத்து கடந்த இரண்டு நாட்களாக கடும் உழைப்பிற்கு பின்னர் பாலத்தை திருடிச் சென்றுள்ள சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது. பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம், நாசிரிங்க் என்ற கிராமத்தில் ஆற்றை கடப்பதற்காக சுமார் 60 அடி நீளம் இரும்புப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதாவது கடந்த 1966ம் ஆண்டு வரையில் இப்பகுதியில் பாலம் இல்லாமல் பொதுமக்கள் அனைவரும் படகில்தான் பயணம் செய்யும் நிலை இருந்தது. அப்போது திடீரென்று ஏற்பட்ட விபத்தின் காரணமாக படகு கவிழ்ந்து அனைவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

இந்த விபத்திற்கு பின்னர் கடந்த 1972ம் ஆண்டு அப்பகுதியில் இரும்பு பாலத்தை அரசு அமைத்தது. இதனால் மக்கள் படகில் செல்வதை தவிர்த்து பாலத்தின் மீது செல்லத்துவங்கினர். காலம் செல்ல செல்ல இரும்பு பாலமும் தேய்மானம் ஆனதால் புதியதாக கான்கிரீட் பாலம் அமைத்து தரப்பட்டது. புதிய பாலம் வந்ததும் மக்கள் அனைவரும் பழைய இரும்பு பாலத்தை பயன்படுத்துவதை தவிர்த்தனர். இதனால் மக்கள் பயன்பாடு இல்லாமல் இருந்தது. இதனிடையே அப்பகுதியில் சில நாட்களாக திருடர்கள் பாலத்தில் அமைக்கப்பட்ட இரும்பு கம்பிகளை அடிக்கடி கழட்டி சென்று எடைக்கு போட்டு பணம் சம்பாதித்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலை நேரத்தில் மக்கள் அவ்வழியாக சென்றபோது இரும்பு பாலம் முழுவதும் இல்லாமல் இருந்தது. அதாவது அந்த பாலம் 10 அடி அகலமும், 12 அடி உயரமும், 60 அடி நீளத்தில் இருந்த அனைத்து இரும்புகளும் காணாமல் போனது. அதனை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திருட்டு அனைத்தும் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் இருந்தபோதே நடைபெற்றுள்ளது. தங்களை நீர்பாசனத்துறை அதிகாரிகளை போன்று காட்டிக்கொண்டு அனைத்து இரும்புகளையும் கழட்டி சென்றுள்ளனர். அது மட்டுமின்றி கடுமையான உழைப்பை இரண்டு நாட்களாக செலுத்தி அனைத்து இரும்புகளையும் திருடர்கள் கழட்டியுள்ளனர் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பாலத்தை அகற்றுவதற்கு கிராம மக்கள் ஏற்கனவே நீர்ப்பாசனத்துறையிடம் விண்ணப்பம் செய்துள்ளனர். இதனால் அதிகாரிகள்தான் பாலத்தை அகற்றுகின்றனர் என எண்ணி அமைதியாக சென்றுள்ளதாக பொதுமக்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News