பக்தர்களுக்கு நுழையவே தடை விதித்த திருவண்ணாமலை நிர்வாகம் வி.ஐ.பிக்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு.?

பக்தர்களுக்கு நுழையவே தடை விதித்த திருவண்ணாமலை நிர்வாகம் வி.ஐ.பிக்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு.?

Update: 2020-12-03 07:10 GMT

கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் கோவில் திருவிழாக்களுக்கு தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கும் மாவட்ட நிர்வாகம் பல கட்டுப்பாடுகளை விதித்தது.

மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை தரிசிக்க பக்தர்கள் செல்வது வழக்கம் என்ற நிலையில் இந்த வருடம் அதற்கு தடை விதிக்கப்பட்டது. மலை ஏறவும், கிரிவலம் வரவும் தடை விதிக்கப்பட்டதோடு கோவிலுக்கு வரவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் உச்சமாக திருவிழாவின் மூன்று முக்கிய நாட்களான சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை திருவண்ணாமலை நகராட்சிக்குள் வெளியூர் மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

இந்த விதிகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் 9 இடங்களில் தடுப்பு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வாறு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்காத மாவட்ட நிர்வாகம் வி.வி.ஐபிக்களுக்கும் வி.ஐ.பிகளுக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் கூறிய நிலையில், பல முக்கியஸ்தர்களும் அவர்களது குடும்பத்தினரும் அனுமதிக்கப்பட்டது அவர்களுக்கு என்று சிறப்பு ஏற்பாடுகளையும் செய்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்காக மடப்பள்ளி கட்டிடத்தின் மாடி தூய்மைப்படுத்தப்பட்டு, உயர்ரக துணிகளை விரித்து, ஆடம்பர ஏற்பாடுகள் செய்து, அங்கு வேறு யாரும் அமராத வண்ணம் பாதுகாப்புக்கு பணியாளர்கள் வேறு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் முக்கியஸ்தர்களும் தங்க கொடிமரத்தின் அருகே அனுமதிக்கப்பட்டதாகவும் கோவிலுக்குள் நாற்காலி போட்டு உட்கார வைக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இவர்கள் எவரும் சுகாதாரத்துறையின் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது போன்ற அறிவுறுத்தல்களையும் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. 

இது ஏற்கனவே அறநிலையத்துறை மீது மக்களுக்கு உள்ள கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது. பக்தர்களுக்கு தடை விதித்து விட்டு முக்கியஸ்தர்களை அனுமதித்த மாவட்ட நிர்வாகம் மீதும் ஹிந்துக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

Source : https://www.google.com/amp/s/www.hindutamil.in/amp/news/tamilnadu/606513-karthigai-deepam.html

Similar News