விளையாட்டு வீரர்கள் இந்த நாட்டிற்கு தேவை.. மதுரையில் அமைச்சர் செல்லூர்ராஜூ பேச்சு.!
விளையாட்டு வீரர்கள் இந்த நாட்டிற்கு தேவை.. மதுரையில் அமைச்சர் செல்லூர்ராஜூ பேச்சு.!
மதுரை மாவட்டம் செல்லூரில் நடந்த கபாடி வீரர்கள் சிலை திறப்பு விழாவில் விளையாட்டு வீரர்கள் நாட்டிற்கு தேவை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
மேலும் அவர் பேசியதாவது: நாட்டிற்கு விளையாட்டு வீரர்கள் தேவை என்பதால் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., மற்றும் அம்மா முக்கியத்துவம் கொடுத்தனர். அம்மா பல விளையாட்டு அரங்குகளை அமைத்தார். உலக செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்தி காட்டினார். தற்போது அம்மாவின் ஆட்சியை நடத்தும் எடப்பாடியார் வீரர்களுக்கு பல சலுகைகளை அளித்துள்ளார். உணவு படியை ரூ.250 ஆக உயர்த்தினார். வீரர்களுக்கான பயிற்சி கட்டணத்தை ரத்து செய்தார். நம்மில் ஒருவராக இருந்து கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்.
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இருவருமே விளையாட்டு மேம்பட உதவி செய்கின்றனர். விளையாட்டு என்பது ஒருவருக்கு தலைமை பண்பு, ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும். மாணவராக இருந்தபோதே நண்பர்கள் சீரமைப்பு குழு அமைத்து ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்தேன். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு எடப்பாடியார் அளித்ததால் ஏழை மாணவர்களும் டாக்டர் ஆகின்றனர்.
என்னை போல் முதலமைச்சரும் அரசு பள்ளியில் படித்தவர் என்பதால் இருவருக்குமே மகிழ்ச்சி. மதுரை மாவட்டத்தில் மட்டும் 435 பேர் பயனடைந்தனர். தற்போது 8990 பேருக்கு டேட்டா கார்டு வழங்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் சிறுகுறு தொழில் துவங்க மானியம் உள்ளது. எய்ம்ஸ் வருகிறது. இதனை பயன்படுத்தி மக்கள் முன்னேற வேண்டும், என்றார். நாட்டில் முதன்முறையாக கபாடி வீரர்களுக்கு காப்பீடு சான்றிதழை அமைச்சர் வழங்கினார்.