ஊழல் செய்பவர்களுக்கு இது ஒரு பாடம்.. 65 வயது முதியவருக்கு 33 வருடம் சிறை தண்டனை.!

ஊழல் செய்பவர்களுக்கு இது ஒரு பாடம்.. 65 வயது முதியவருக்கு 33 வருடம் சிறை தண்டனை.!

Update: 2020-12-17 15:35 GMT

காஞ்சியில் போலி கணக்கு எழுதி மோசடி செய்த முதியவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தள்ளாத வயதில் கம்பு உதவியுடன் அவர் சிறைக்கு நடந்து சென்றது சக கைதிகளிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் விஜி ராவ் நகரைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு 65, இவர் காஞ்சிபுரத்தில் கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பதவியில் இருந்தபோது போலி கணக்கு எழுதி மோசடி செய்ததாக தெரிகிறது.

இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட வணிக குற்ற புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் வாரியத்தின் துணைப்பதிவாளர் கடந்த 2006ம் ஆண்டு புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சின்ன கண்ணுவை கைது செய்திருந்தனர். இந்த வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சின்ன கண்ணுவை 2018ம் ஆண்டு வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

ஆனால், அரசு தரப்பில் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி கயல்விழி சின்னக்கண்ணு மீது நம்பிக்கை மோசடி செய்தது, பொய் கணக்கு எழுதி போலியான ஆவணங்கள் தயாரித்தது உள்ளிட்ட குற்றங்கள் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே சின்ன கண்ணுக்கு 33 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.48 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பளித்தார். தொடர்ந்து, கம்பு ஊன்றியபடி நீதிமன்ற வளாகத்தை விட்டு சின்னக்கண்ணு வந்தது பலருக்கும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

கடந்த 2006ம் ஆண்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு 2020ஆம் ஆண்டு முடிவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 65 வயதாகும் சின்னக்கண்ணு சிறையில் தனக்கான வேலைகளை தானே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊழல் செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இனிமேல் ஆவது லஞ்சம், ஊழல் செய்வதை நிறுத்தினால் நன்று.

Similar News