அபராதம் விதித்தற்கு திருவிழாவில் பெண் எஸ்.ஐ'க்கு கத்தி குத்து - தமிழகத்தில் கேள்விக்குறியாகி நிற்கும் சட்டம், ஒழுங்கு

Update: 2022-04-23 11:52 GMT

அபராதம் விதித்ததற்கு கோபமடைந்து நெல்லை, சுத்தமல்லி அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில், பெண் எஸ்.ஐக்கு சரமாரியாக கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வருபவர் மார்க்ரெட் திரேஷா. இவர் நேற்று (ஏப்ரல் 22) இரவு பழவூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு பாதுகாப்பிற்காக சென்றிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென்று எஸ்.ஐ. மார்க்ரெட் திரேஷாவை கத்தியால் சராமாரியாக குத்தினார். இதில் எஸ்.ஐ.யின் இடது கன்னம் மற்றும் கழுத்து மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட சக போலீசார் உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோயில் பாதுகாப்பிற்காக ஈடுபட்ட எஸ்.ஐ.க்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு வாகன சோதனையில் எஸ்.ஐ. மார்க்ரெட் திரேஷா ஈடுப்டடிருந்தார். அப்போது மதுபோதையில் ஆறுமுகம் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். இதனை பார்த்த எஸ்.ஐ. அவருக்கு அபராதம் விதித்தார். அதனை மனதில் வைத்துக்கொண்ட ஆறுமுகம் கோயில் திருவிழாவின்போது எஸ்.ஐ., மார்க்ரெட் திரேஷாவை கண்மூடித்தனமாக வெட்டியதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இதுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: Abp

Image Courtesy: Nakkheeran

Tags:    

Similar News