கொரோனா பரவல் எதிரொலி.. திருத்தணியில் வெளிமாநில பயணிகளுக்கு கட்டுப்பாடு.!
தமிழக எல்லையான ஓசூர், கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை சாவடிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தினமும் அதிகரித்து வருவதால், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் நேற்று முதல் இபாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழக எல்லையான ஓசூர், கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை சாவடிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொன்பாடியில் உள்ள தமிழக ஆந்திர மாநில எல்லையான சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கை நடத்தினர். அப்போது ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வரும் அனைத்து வாகனங்களையும் போலீசார் நிறுத்தி இபாஸ் உள்ளதா என்று சோதனை செய்தனர். இபாஸ் இல்லாதவர்களை போலீசார் மீண்டும் ஆந்திராவுக்கு திருப்பி அனுப்பினர். இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றதை காணமுடிந்தது.