பெரியநாயகி அம்மன் தேர்திருவிழா கொடியேற்றம் நிறுத்தம்: தி.மு.க. அரசுக்கு எதிராக திரண்ட மக்கள்!
தேவிகாபுரத்தில் நீடித்து வரும் பதற்றம் காரணமாக பெரியநாயகி அம்மன் உடனுறை கனககிரீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா கொடியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் கிராமம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு.
திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரத்தில் நூற்றாண்டுகளுக்கும் மேலான மிகவும் பழமை வாய்ந்த பெரியநாயகி அம்மன் உடனுறை கனககிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் அன்று தேர்த்திருவிழா களைகட்டுவது வழக்கம். 13 நாட்கள் திருவிழா நடைபெறும். அதே போன்று இந்த ஆண்டு பங்குனி உத்திரம் வர உள்ளது. இதனிடையே கடந்த ஆண்டு வழக்கததை மீறி ஒருவர் சாமி தூக்குவதற்கு முயற்சி செய்தார். அதற்கு வழக்கமாக சாமி தூக்கும் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையில் சாமி தூக்க வந்த நபர் தனக்கும் விழாவில் ஒருநாள் உபயதாரராக சேர்க்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் அவரை ஒருநாள் உபயதாரராக சேர்த்துக்கொள்ளவும், சாமி தூக்கவும் அனுமதி வழங்கினார். இந்த சம்பவத்துக்கு கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். வழக்கத்தை மீறி செயல்படும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் போக்கு சரியில்லை என கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனிடையே பொதுமக்களை மிரட்டும் வகையில் இது அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் ஆகும். இங்கு நாங்கள் வைப்பதுதான் சட்டம் என்று கூறியுள்ளனர். இதனை கண்டிக்கும் விதமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மறியலில் கிராம மக்கள் ஈடுபட்டனர். அப்போது அறநிலையத்துறை அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் போலீசார் வரவழைத்து கிராம மக்களை அடித்து விரட்டியுள்ளனர். இந்த சம்பவம் சுற்று வட்டார கிராமம் முழுவதும் பரவியது. இதனால் அந்த கிராமம் மட்டுமின்றி அருகாமையில் உள்ள கிராமங்களிலும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த திருவிழா தொடர்பாக கிராம மக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நேற்று (மார்ச் 10) விழா கொடியேற்றம் நடைபெற இருந்தது.