கருணாநிதி கொள்கையை தவிர்த்துவிட்டு தி.மு.க அரசு செயல்படுகிறது - ஸ்டாலின் மீது பாயும் தொழிற்சங்கங்கள்

Update: 2022-07-25 09:29 GMT

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் செப்டம்பர் 20ம் தேதி 1,000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூரில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., உள்ளிட்ட தொழிற்சங்கங்கங்கள் சேர்ந்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து நேற்று கூட்டாக தற்போதைய தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவாதம் தொடர்பாக செய்தியாளர்களிடம் ஏ.ஐ.டி.யு.சி., மாநிலச் செயலாளர் சந்திரகுமார் கூறியதாவது: விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தி தங்களுடைய நெல் கொள்முதல் செய்யப்படுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கினார். ஆனால் தற்போது அவரது கொள்கையை தவிர்த்துவிட்டு தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது. அதிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணிகளை தற்போது தனியார் மயப்படுத்தி வருகிறது.

மேலும், கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் பணியிடத்துக்கு டெண்டர் விடப்படுகிறது. அதே போன்று திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளும் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. நவீன அரிசி ஆலைகளில் இயக்குனர், உதவி இயக்குனர் மின் இணைப்பாளர் உள்ளிட்ட பணிகளும் தனியார் மயமாகிவிட்டது.

இது போன்ற மோசமான செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக தி.மு.க., அரசு இதனை கைவிட வேண்டும். மீண்டும் ஒரு போராட்டத்திற்கு இந்த அரசு ஏற்படுத்திவிட்டது. எனவே வருகின்ற செப்டம்பர் மாதம் 20ம் தேதி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றார்.

மேலும், தி.மு.க., கூட்டணியான சி.பி.எம்., கட்சியின் விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை மிக கடுமையாக விமர்சனம் செய்தார். டெல்டா மாவட்டத்தின் உணவு பற்றி தெரியாத ஒருவரை உணவுத்துறை அமைச்சராக நியமித்துள்ளனர். டெல்டா பற்றி அவருக்கு என்ன தெரியும் என்ற கேள்வியையும் எழுப்பினார்.

Source, Image Courtesy: Abp

Tags:    

Similar News