10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு.. உளூந்தூர்பேட்டையில் தற்போதைய நிலவரம்.!

10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு.. உளூந்தூர்பேட்டையில் தற்போதைய நிலவரம்.!

Update: 2020-11-27 10:08 GMT

உளூந்தூர்பேட்டை அருகே தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் உளூந்தூர்பேட்டை, விருத்தாச்சலம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளூந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்திற்கு செல்லும் வழியில், உளூந்தூர்பேட்டை, விருத்தாசலம் சாலையின் இடையே நரியன்ஓடை பகுதியில் 100 மீட்டர் அளவில் தரைப்பாலம் ஒன்று இருக்கிறது.


இந்தப் பாலத்தின் மீது ஒவ்வொரு வருடமும் மழை பெய்யும்போது நரியன் ஓடையில் வெள்ளப் பெருக்கெடுத்து தண்ணீர் வரும்போது இந்தப்பாலம் மூழ்கிவிடும்.
இந்நிலையில், நிவர் புயலின் காரணமாக நேற்று நள்ளிரவு மேட்டுக்குப்பம் பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியில் வயல்வெளிப் பகுதிகளில் தேங்கிய தண்ணீர், நரியின் ஓடையை வந்து தரை பாலத்தை மூழ்கடித்தது. சுமார் 4 அடி உயரத்திற்கு இந்த தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக மேட்டுக்குப்பம் ஆலடி, மணக்கொல்லை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த தரைப்பாலத்தை உயர் மட்ட பாலமாக உயர்த்தி தருமாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News