சென்னையில் மீண்டும் ஒரு விசாரணை கைதி மரணம் - சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட வழக்கு!

Update: 2022-06-13 11:17 GMT

திருவள்ளூர் மாவட்டம், அலமாதி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரை வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் இரவு கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து நேற்று (ஜூன் 12) மாலை 5 மணியளவில் திடீரென்று ராஜசேகருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன போலீசார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ராஜசேகரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி அந்த தனியார் மருத்துவமனை கூறியுள்ளது. இதனால் போலீசார் ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு ராஜசேகரை அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ராஜசேகர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு கைதி ஒருவர் மரணமடைந்திருப்பது மீண்டும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட சென்னை வடக்கு மண்டலக் கூடுதல் ஆணையர் அன்பு மற்றும் மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜஸ்வரி, துணை ஆணையர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும், ராஜசேகரை கைது செய்தவர்கள் மற்றும் இரவில் அவரை தங்க வைத்த காவலர்களிடம் விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையில் 9 லாக்கப் மரணங்கள் நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News