தமிழகத்தில் தடுப்பூசி ஒத்திகை வெற்றி.. அதிகாரிகள் மகிழ்ச்சி.. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.!

தமிழகத்தில் தடுப்பூசி ஒத்திகை வெற்றி.. அதிகாரிகள் மகிழ்ச்சி.. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.!

Update: 2021-01-02 13:13 GMT

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதே போன்று இந்தியாவிலும் இன்னும் சில நாட்களில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்று நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும் என கூறப்பட்டிருந்தது. முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள், மருத்துவமனையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் என 5 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை ஏற்கனவே 4 மாநிலங்களில் கடந்த 28, 29 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை இன்று நடந்தது.
இதில் நடைபெற்ற 17 இடங்களிலும் தடுப்பூசிகள் போடப்பட்டது.

ஒத்திகையில் பங்கேற்பவர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி வாசல்கள் பயன்படுத்தப்பட்டன. உள்ளே வருபவர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி ஒத்திகையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் தேரணி ராஜன் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.

11 மணி வரை ஒத்திகை நடைபெற்றது. தடுப்பூசி ஒத்திகைக்கு வந்தவர்கள் 2 இடங்களில் கண்காணிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். முதலிடத்தில் ஒத்திகைக்காக வந்தவரை கண்காணிக்க மருத்துவ அலுவலர் ஒருவர் பணியில் இருந்தார். அவர் பட்டியலில் உள்ளவர்தான் ஒத்திகைக்கு வந்திருக்கிறாரா? என்பதை சரிபார்த்துக்கொண்டார்.

2- வது இடத்தில் அமர்ந்திருந்த அலுவலர்கள் ‘கோ-வின்’ ஆப் மூலம் பட்டியலில் உள்ளவர் தான் ஒத்திகைக்கு வந்திருக்கிறாரா? என்று மீண்டும் சரிபார்த்தனர். இதன் பின்னர் சரிபார்க்கும் பணி முடிந்ததும் ஒத்திகைக்கு வந்த நபர் கோவிட்-19 தடுப்பூசி போடப்படும் அறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த அறையில் செவிலியர்கள் தடுப்பூசி போடும் ஒத்திகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒத்திகை முடிந்ததும் அந்த நபர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு அரை மணி நேரம் காத்திருப்பு அறையில் வைக்கப்பட்டார்.

அவருக்கு பக்க விளைவு இருக்கிறதா? என்று சுமார் அரைமணி நேரம் கண்காணிக்கப்பட்டது. அவருக்கு பக்கவிளைவு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். தடுப்பூசி போடப்பட்ட வருக்கு பக்க விளைவு ஏதாவது வரும் பட்சத்தில் அவர் உடனடியாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரை கண்காணிக்கும் பணிகள் நடப்பது போலவும் ஒத்திகை நடத்தப்பட்டது.

இன்று தடுப்பூசி போடப்படவில்லை. தடுப்பூசி போடுவது போல ஒத்திகை மட்டுமே நடத்தப்பட்டது. ஏற்கனவே நடந்த 3 கட்ட தடுப்பூசி பரிசோதனையின்போது எந்தவிதமான பக்க விளைவும் ஏற்படவில்லை என்பதால் இன்று ஒத்திகை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News