கைலாசநாதர் கோயில் குளம் ஆக்கிரமிப்பு: அமைச்சர் சேகர் பாபுவுக்கு கோரிக்கை விடுத்த பக்தர்கள்!

Update: 2022-06-18 06:03 GMT

விழுப்புரம் திரு.வி.க. நகரில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் பல ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே இக்கோயிலுக்குச் சொந்தமான குளம், காமராஜர் மற்றும் திரு.வி.க. நகரில் இரண்டு கடைகள் மற்றும் முத்தோப்பு அகரம்பாட்டையில் 31 வீடுகள், திரு.வி.க. வீதியில் 7 வீடுகள் என பல அசையா சொத்துக்கள் உள்ளது.

இந்நிலையில், இக்கோயிலில் உள்ள குளம் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்போது குளம் அங்கு இருந்ததற்கான அடையாளங்களே இல்லாமல் போய்விட்டது. இது தொடர்பாக பிரதோஷ பேரவைத் தலைவர் நடராஜன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விபரத்தை கேட்டுள்ளார். அதன்படி அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பதில் வந்துள்ளது. அதில், கோயில் சொத்துக்கள் விபரம் மற்றும் புல எண் 5ல் கருங்கல்லால் ஆன குளம் இருந்தது. தற்போதைய நிலையில் ஒரு சமூகத்தை சேர்ந்தனர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், அனைத்து கோயில்களில் உள்ள சொத்துக்கள் விபரங்களை தகவல் பலகையில் எழுத வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி கைலாசநாதர் கோயிலில் வைக்கப்பட்ட தகவல் பலகையில், குளம் இருந்ததை குறிப்பிடப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். எப்படி கோயில் குளம் இருந்ததற்கான விரபத்தை எழுதவில்லை என்ற கேள்வியையும் பொதுமக்கள் எழுப்பினர். மேலும் கோயிலுக்குச் சொந்தமான குளம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி குளத்தை மீட்க, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மெத்தனப் போக்காக செயல்படுவதாக பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோயில் குளத்தை மீட்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

Source, Image Courtesy: Abp

Tags:    

Similar News