அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போன பழங்கால சிலைகள் - திருடப்பட்டனவா?

அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போன பழங்கால சிலைகள் - திருடப்பட்டனவா?

Update: 2020-11-14 07:20 GMT

கோவிலில் இருந்து கடத்தப்பட்ட பைரவர் சிலை சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் அருங்காட்சியகத்தில் இருந்தே சிலையை மர்ம கும்பல் கடத்தியுள்ளதாகவும் இதுபோல் பல சிலைகள் அருங்காட்சியகத்தில் இருந்து கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேலூர் மாவட்டம் திருமலைசேரியில் சோமநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பிரசித்தி பெற்ற கோவிலில் கல் தூண்கள், 12 யோகி தேவி சிலைகள், பைரவர் சிலை, துவாரபாலகர்களின் கற்சிலைகள் என பல்வேறு சிலைகள் கடத்தப்பட்டு இருப்பதாக கடந்த 2018ம் ஆண்டு ஆதாரங்களுடன் டெல்லி பாபு என்பவர் வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலைகளை திருடியதாக வழக்கு பதிவு செய்து உள்ளூர் காவலர்கள் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவர்கள் நடத்திய விசாரணையில் இந்த கோவிலில் கடத்தப்பட்ட சிலைகள் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டது.

சோமநாத சுவாமி கோவிலில் கடத்தப்பட்ட சிலைகள் பாதுகாப்பு கருதி சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கு விசாரணையை முடித்த பிறகு சிலைகள் அனைத்தும் கோவிலுக்கு திருப்பி அளிக்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த சிலைகளில் பைரவர் சிலை காணாமல் போயுள்ளதாக டெல்லி பாபு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். பைரவர் சிலை போலவே பல்வேறு சிலைகளும் இந்த அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அருங்காட்சியகத்தில் பணி புரியும் ஊழியர்களின் உதவியோடு யாரேனும் இந்த சிலைகளை கடத்தி உள்ளனரா என்ற கோணத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்டு அருங்காட்சியத்தில் வைத்திருந்த நிலையில் அருங்காட்சியகத்திலேயே சிலை திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Similar News