அமெரிக்கா, ஜப்பானே அனுமதிக்கும் போது ராஜஸ்தானுக்கு என்ன - பட்டாசு தயாரிப்பாளர்கள் குமுறல்.!
அமெரிக்கா, ஜப்பானே அனுமதிக்கும் போது ராஜஸ்தானுக்கு என்ன - பட்டாசு தயாரிப்பாளர்கள் குமுறல்.!
ஒவ்வொரு மாநிலமாக கொரோனா சூழலை காரணம் காட்டி பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து வருவது சிவகாசி பட்டாசுத் தொழிலுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலம் தன்னிச்சையாக பட்டாசு வெடிக்க தடை விதித்ததைத் தொடர்ந்து மேற்கு வங்கம், டெல்லி, ஒடிசா என வரிசையாக பிற மாநிலங்களும் பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கக் தொடங்கி உள்ளன. கர்நாடகாவும் இந்த வரிசையில் சேர்ந்த நிலையில் இந்துக்களின் கடும் எதிர்ப்புக்குப் பின் முதலமைச்சர் எட்டியூரப்பா தடையை நீக்கி உத்தரவிட்டார்.
வரும் முழுவதும் தீபாவளி சமயத்தில் நடக்கும் வியாபாரத்துக்காகவே பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறு, குறு, முக்கியமாக குடிசைத் தொழிலுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தடை விதித்துள்ள மாநிலங்களை தடையை நீக்க அறிவுறுத்துவார் என்று பட்டாசு தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பிரதமரிடம் இது தொடர்பாக பட்டாசுத் தயாரிப்புகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே முதல்வர் பழனிச்சாமியும் ஒடிசா, ராஜஸ்தான் மாநில முதல்வர்களுக்கு தடையை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
எனினும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் முக்கியமான அறிகுறி மூச்சுத் திணறல் என்பதால் பட்டாசு புகை பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சத்தில் பிற மாநிலங்களும் தடை விதிப்பது பற்றி ஆலோசித்து வருவதாக அஞ்சப்படுகிறது. இந்த மாநிலங்கள் சில வாரங்களுக்கு முன்பு தான் விற்பனையாளர்களுக்கு பட்டாசு விற்க உரிமம் வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கையில் தற்போது திடீரென்று தடை விதிக்க என்ன காரணமாக இருக்கும் என்று பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.கடந்த ஜூலை மாதம் ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளே கொரோனா தொற்று உச்சத்தை எட்டிப் கொண்டிருந்த சமயத்தில் கூட பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட தடை விதிக்கவில்லை எனும் போது, இந்தியாவில் தற்போது தொற்று குறைந்து வரும் சூழலில் தடை விதிப்பது ஏன் என்று தயாரிப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். வளர்ந்த நாடுகளுக்கு கொரோனா சூழலில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்பு பற்றி தெரியாதா என்ன? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.