காவல்துறை விசாரணையில் கொல்லப்பட்ட பழங்குடியின நபர் - இதுவரை என்ன நடந்தது?

Update: 2022-05-06 09:25 GMT

கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு தங்கமணியை போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரண வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு அருகே உள்ள தட்டரணை என்ற கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஆவார். அப்பகுதியில் இவர் சாராய விற்பனை செய்வதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி திருவண்ணாமலை கலால் போலீசார் விசாரணை செய்வதற்காக அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் விசாரணை முடிந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவண்ணாமலை கிளைச் சிறையில் தங்கமணியை அடைத்தனர்.

இதற்கிடையே கடந்த 27ம் தேதி அன்று காலையில் தங்கமணிக்கு வலிப்பு வந்துவிட்டதாக போலீசார் கூறினர். இதற்காக அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உடல் நலம் தேறிவிட்டதாக சொல்லி மீண்டும் சிறைக்கு மாற்றிய மாலையே மீண்டும் வலிப்பு ஏற்பட்டதாம்.

இதனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கமணி இரவு 8 மணியளவில் உயிரிழந்துவிட்டதாக போலீசார் தகவல் கூறினர். இதனை கேள்விப்பட்ட தங்கமணியின் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர். அப்போது போலீசார் பொய் வழக்கு போட்டு அடித்துக்கொன்று விட்டு நாடகம் ஆடுகின்றனர். எனவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீசார் 2 லட்சம் கேட்டு தங்கமணி தராததால் அடித்துக்கொன்று விட்டனர். எனவே இவரது மரணத்திற்கு உரிய நீதி வேண்டும். அப்போதுதான் உடலை வாங்குவோம் என்று கூறிவிட்டனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், சிறையில் தங்கமணிக்கு கடந்த 27ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் சிகிச்சை பலனின்றி இரவு 8 மணிக்கு இறந்துவிட்டதாக கூறினார். மேலும், இது பற்றி உடற்கூறாய்வு முடிவுகம் வந்தால் உண்மை தெரியும் என்றார். இதனை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்கு மத்தியில் தங்கமணியின் மரணத்தில் இருக்கின்ற மர்மம் விலக வேண்டும் என்றும், அதற்கான நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியின்றி டிஜிபி சைலேந்திரபாபு தங்கமணியின் மரண வழக்கை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றி உத்தரவிட்டார். இதுற்கு காரணமான திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன், கலால் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் ஜெயச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இதன் பின்னர் கடந்த மே 2ம் தேதி அன்று தங்கமணியின் உடலை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து பெற்றச்சென்றனர். ஒரு குடும்ப தலைவன் உயிரிழந்து விட்ட நிலையில் நிற்கதியான நிலைக்கு அந்த குடும்பம் தள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவத்திற்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News