கொட்டித் தீர்க்கும் கனமழை.. சென்னையின் தற்போதைய நிலவரம் என்ன.!

கொட்டித் தீர்க்கும் கனமழை.. சென்னையின் தற்போதைய நிலவரம் என்ன.!

Update: 2021-01-05 17:02 GMT

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் மழை விடாமல் பெய்து வரும் நிலையில், மேலும் 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதலே கனமழை பெய்துவருகிறது. தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், குரோம்பேட்டை, பல்லாவரம், உள்ளிட்ட பல இடங்களில் அதிகாலை கனமழையாகவும் பின்னர் மிதமான மழையாகவும் பெய்து வருகிறது. வேளச்சேரி, ஆதம்பக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நிற்காமல் பெய்யும் மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தாம்பரம் சுரங்கப்பாதை, வழக்கம்போன்று இந்த மழையிலும் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வாகன ஓட்டிகள், தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் இருந்து கிழக்கு தாம்பரம் செல்ல 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கன மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பல சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கிறார்கள். கிண்டி தொழிற் பேட்டையில் இருந்து அண்ணா சாலை நோக்கி செல்லக்கூடிய சைதாப்பேட்டை பஜார் சாலையில் கனமழையின் காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளது. தண்ணீர் தேங்கியுள்ளதால் பஜார் சாலையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையில் மேலும் 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் சமூக வலைதளவாசிகள் ஆங்காங்கே மழையின் அளவை வீடியோ மற்றும் போட்டோவாக எடுத்து பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News