குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய முட்டுக்கட்டை போடுவது யார்?
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய முட்டுக்கட்டை போடுவது யார்?;

மீத்தேன், இயற்கை எரிவாயு, கெயில், எட்டுவழிச் சாலை மற்றும் லேட்டஸ்டாக உயர்மின் அழுத்த கம்பிகள் பதிப்பது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு இந்த மாதிரி போராட்டங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்து அவற்றை செயல்படுத்த விடாமல் செய்த பெருமை தமிழகத்துக்கு உண்டு. மீத்தேன் திட்டத்தால் புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலத்தில் கிராமத்தினர் பலருக்கு புற்றுநோய் ஏற்படுவதாகக் கூறி திட்டம் எதிர்க்கப்பட்டது. ஆனால் இப்போது அவர்களது நிலை என்ன, திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில் கிராமத்தில் சுகாதாரம் எப்ப்டி இருக்கிறது என்பது பற்றி எந்தத் தகவலையும் போராட்டங்களைத் தூண்டி விட்டவர்கள் பொது வெளியில் வெளியிட்டதாகத் தெரியவில்லை. இதிலிருந்தே இவர்களது நேர்மையையும் நோக்கத்தையும் உணர்ந்து கொள்ளலாம் என்ற போதும் இந்த மாதிரியான பொய்ப் பிரச்சாரங்களுக்கு மக்கள் இன்னும் மயங்கத் தான் செய்கிறார்கள்.
அந்த வகையில் இப்போது புதிதாக ஒரு எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி இருக்கிறது. தற்போதைய தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பா.ஜ.க தலைவராக இருந்தபோது தொடர்ந்து பலமுறை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதன் பயனாக, இஸ்ரோ விஞ்ஞானிகள் குலசேகரப்பட்டினம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஆய்வு செய்து ராக்கெட் ஏவுதளம் அமைக்க சரியான இடத்தை தேர்வு செய்தனர். இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டபோது இந்த விஷயத்திலும் தி.மு.க செய்த தில்லாலங்கடி வேலைகள் வெளிச்சத்துக்கு வந்தன. ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் முன்பு அப்போது விஞ்ஞானி விக்ரம் சாராபாய் தலைமையில் செயல்பட்ட இஸ்ரோ தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அப்போதைய தி.மு.க அரசு கமிஷன் கேட்டதால் வெறுத்துப்போன இஸ்ரோ தமிழகத்தில் ஏவுதளம் அமைக்கும் முடிவை கைவிட்டதாகவும் உண்மைகள் வெளிப்பட்டன. அதன்பின்னர் பல ஊழல்கள் செய்து விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்யும் கட்சி என்று பெயர் பெற்ற தி.மு.க அந்தப் பெயரை நிலைநாட்டும் வகையில் இன்றளவும் வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.