பழனியில் தென்னந்தோப்பை நாசம் செய்த காட்டு யானைகள்.. காட்டுப்பகுதிக்கு விரட்ட கோரிக்கை.!

பழனியில் தென்னந்தோப்பை நாசம் செய்த காட்டு யானைகள்.. காட்டுப்பகுதிக்கு விரட்ட கோரிக்கை.!

Update: 2020-12-20 09:33 GMT

பழனியில் காட்டுயானைகள் தோட்டத்துக்குள் புகுந்து 50 தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தியது. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயிகள் குற்றச்சாட்டி வருகின்றனர். யானைகளை அடர்ந்த வனபகுதிக்குள் விரட்டியடிக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பழனியை அடுத்துள்ள பாலசமுத்திரம் கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனபகுதிகளில் சிறுத்தை, காட்டுயானைகள், மான், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகிறது.

வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள வெட்டுக் கொம்பை, அய்யபுள்ளி கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டுயானைகள், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தும், மரங்களை உடைத்து சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், செல்லப்பன் மற்றும் காளிமுத்து ஆகியோரது தோட்டத்திற்குள் நுழைந்த 10 யானைகள் கொண்ட கூட்டம், தோட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

மேலும் தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின் வேலிகளை உடைத்து சேதப்படுத்திவிட்டு யானை கூட்டம் தோட்டத்திற்கு அருகில் உள்ள வனப் பகுதியில் முகாமிட்டுள்ளது. இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் தோட்டத்தில் புகுந்து மரங்களை சேதப்படுத்துவதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

யானைகள் தோட்டத்தில் புகுந்துள்ளது பற்றி விவசாயி வனத்துறையினரிடம் தகவல் கூறியதாக தெரிகிறது. ஆனால் இன்னும் யானைகளை விரட்டியடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற புகாரும் கூறப்படுகிறது.
 

Similar News