தொடர்ந்து இரண்டாவது முறையாக கோவில் உண்டியல் திருட்டு-கிராம மக்கள் அதிர்ச்சி!

Update: 2021-04-18 02:30 GMT

நாமக்கல் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்த மர்ம நபர்கள் அதில் இருந்த பக்தர்களின் காணிக்கைகளை கொள்ளையடித்து சென்று உள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கோட்டக்காடு என்னும் இடத்தில் கும்பத்து மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக அந்த பகுதியில் விளங்கி வரும் இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். விசேஷ நாட்களில் இங்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படும். இந்த கோவிலில் தினமும் காலை மாலை என இருவேளைகளும் பூஜைகள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இரவு வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூசாரி பூட்டி சென்றுள்ளார். மறுநாள் காலை கோவிலை திறக்க வந்த பூசாரி கோவில் உண்டியல் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுமார் மூன்று அடி உயரம் இருந்த உண்டியலை மர்ம நபர்கள் அடியோடு பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர்.

உடனே அதிர்ச்சி அடைந்த கோவில் பூசாரி பள்ளிபாளையம் காவல்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் அதிகமாக வசிக்கும் இந்த பகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோவிலில் உண்டியல் திருட்டு நடைபெற்று உள்ளதால் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இரவு நேரத்தில் இந்த பகுதிக்கு காவல்துறையினர் ரோந்து வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது முறையாக பள்ளிபாளையத்தில் கோவில் உண்டியல் திருட்டு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News