பொள்ளாச்சி நெகமம் அடுத்த வடசித்தூரில் பழமையான பெருமாள் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடக்க இருந்ததை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக கும்பாபிஷேகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்
பொள்ளாச்சி அடுத்து நெகமம் வடசித்தூரில் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கரிவரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மிகவும் பழமையான கோயில் என்பதால் இந்தக் கோவில் பராமரிக்கப்படாமல் இருந்து வந்தது. அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததன் விளைவாக தற்போது கோவிலில் புதிய சிலைகள் வைக்கப்பட்டு, கோபுரங்கள் அமைத்து, கோவில் முன்பு மண்டபம் கட்டி , வண்ணங்கள் தீட்டப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டது.
புனரமைக்கப்பட்ட இந்த கோவிலின் கும்பாபிஷேகம் ஏப்ரல் 25ஆம் தேதி நடத்தப்படும் என்று இந்து அறநிலையத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அரசு சார்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் புனரமைக்கப்பட்ட கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் குறித்த நேரத்தில் நடைபெறுமா என்று பக்தர்கள் கவலையில் இருந்தனர்.
தற்போது கோவில் நிர்வாகம் சார்பாக இந்த கோவில் கும்பாபிஷேகம் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று காத்திருந்த பக்தர்கள் மற்றும் வணிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோவில் கும்பாபிசேகம் தடைபட்டு உள்ளதால் தங்களுக்கு ஏதேனும் கஷ்டங்கள் வருமா என்று பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.