அறநிலையத்துறை அலட்சியத்தால் உடைந்து விழும் நிலையில் கோவில் கதவு-உறங்கும் அதிகாரிகள்!
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பழமையான கோவில் ஒன்றில் உள்ள மரக்கதவு உடைந்து விழும் நிலையில் இருப்பதால் அதனை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பக்தர்கள் இரண்டு வருடங்களாக கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத கோவில் செயல் அலுவலர் இனிமேலாவது நடவடிக்கை எடுப்பாரா என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பழமையான சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கோவிலை பராமரிக்க வேண்டிய அறநிலையத்துறை சிறிது அளவும் அதைப்பற்றி கவலை கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருகிறது. இந்த கோவிலில் இருக்கும் மரக்கதவு எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயத்தில் இருந்து வருகிறது. உடைந்து விழும் நிலையில் உள்ள இந்த மர கதவை கருங்கல்லை கொண்டு முட்டுக் கொடுத்து கதவு கீழே விழாமல் பொதுமக்கள் பாதுகாப்பு வருகின்றனர்.
இந்த கதவை சீர் செய்ய வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த இரண்டு வருடங்களாக கோவில் செயல் அலுவலரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால் அவர்களின் கோரிக்கையை சற்றும் ஏற்காத அதிகாரிகள் கோவில் கதவை சீர் செய்யாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் கதவு எந்த நேரத்திலும் இடிந்து விழும் என்பதால் அச்சத்திலேயே கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
எனவே கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுப்பதற்கு உடனடியாக அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலில் புனரமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.