ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் - அறிக்கை கேட்ட உயர்நீதிமன்றம்!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் எறும்பீஸ்வரர் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் கோவில் செயல் அலுவலர் தொல்லியல் துறையிடம் ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்திலிருந்து தஞ்சை செல்லும் வழியில் திருவெறும்பூர் என்று தற்போது அழைக்கப்படும் 'திருஎறும்பியூரில்' வரலாற்று சிறப்புமிக்க திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் ஒன்று உள்ளது. சோழ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் நாயன்மார்களால் தேவாரம் பாடப்பட்ட திருத்தலம் ஆகும். இந்த கோவில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தமிழக இந்து அறநிலையத்துறை இந்த கோவிலை நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில் இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு கட்டிடங்களை கட்டி வருகின்றனர். அதேபோல் கோவிலுக்கு சொந்தமான குளம் கழிவுநீர் தேங்கும் இடமாக மாறியுள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் குளத்தை சுத்தப்படுத்தி சுத்தமான நீர் தேங்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் இந்த கோவிலில் தேர் திருவிழா நடத்துவதற்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று திருச்சியை சேர்ந்த கேசவன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய தொல்லியல்துறையுடன் ஆலோசித்து கோயில் செயல் அலுவலர் ஜூன் 7ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலுக்கு சொந்தமான இடத்திலேயே இவ்வளவு ஆக்கிரமிப்புகள் என்றால் கிராமங்களில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சிறிய கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் நிலை என்ன என்று சந்தேகம் எழுந்துள்ளது.