ஐம்பொன்னாலான சரஸ்வதி சிலையை விற்க முயன்றவர் கைது!

Update: 2021-05-05 06:08 GMT

வெள்ளக்கோவில் அருகே ஐம்பொன்னாலான சரஸ்வதி சிலையை விற்க முயன்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே மாந்தபுரம் என்னும் இடத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் கோவையில் இருந்த ஒருவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு முக்கால் அடி உயரமும் இரண்டு கிலோ எடையும் உள்ள ஐம்பொன்னாலான சரஸ்வதி சிலையை வாங்கியுள்ளார். தற்போது அந்த சிலையை ரகசியமாக விற்கும் போது காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து காவல்துறையினர் ஐம்பொன் சிலையை மீட்டனர். ஐம்பொன் சிலையை குறித்த தகவல்கள் ஆய்வுக்கு பிறகு தான் தெரியவரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆய்வு செய்தபிறகு இது எத்தனை ஆண்டுகள் பழமையான சிலை என்றும் இந்த ஐம்பொன்னாலான சரஸ்வதி சிலையின் உண்மையான மதிப்பு என்ன என்று தெரிய வரும். கோவையிலிருந்து யாரிடம் வாங்கினார் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்ட சிலை என்ற கோணத்தில் கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

ஐம்பொன்னாலான சிலையை இவ்வளவு எளிதாக ஒரு கோவிலில் இருந்து எடுத்து விற்க முடியும் என்றால் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலில் உள்ள சிலைகளை எவ்வாறு கண்காணித்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் இதுபோல் எத்தனை சிலைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப் பட்டுக் கொண்டிருக்கின்றது என்று நினைக்கும் போது தலை சுற்றுகிறது என்று அப்பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவர் தெரிவித்தார்.

கோவிலில் சிலைகள் காணாமல் போவது தொடர்கதையாகி வரும் நிலையில் அனைத்து கோவில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத அறநிலையத்துறை இனியாவது கோவில்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News