முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் - புதுச்சேரி கோவில் பணியாளர்கள் கோரிக்கை!

Update: 2021-06-02 07:31 GMT

கொரோனா தொற்று காலகட்டத்திலும் கோவில்களில் வழக்கமான பூஜை நடைபெற்று வருவதால் கோவில் பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியர்கள் சேவா சங்க துணைத் தலைவரும், புதுவை மாநில அமைப்புச் செயலாளருமான ராமஸ்வாமிநாத சிவாச்சாரியார் மற்றும் நிர்வாகிகள் தங்களின் கோரிக்கை அடங்கிய மனுவை புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர். அந்த கோரிக்கை மனுவில் கொரோனா போன்ற பேரிடர் காலத்திலும் கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இதனால் மக்களுக்கு முன்னின்று சேவையாற்றி வரும் கோவில் பணியாளர்களையும் முன் களப்பணியாளர்கள் வரிசையில் சேர்க்க வேண்டும். கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பரிசாரகர்கள், ஓதுவார்கள், பூசாரிகள், இசை வாத்திய கலைஞர்கள், மலர் தொடுப்போர், மெய்க்காவலர்கள், விளக்கேற்றிகள், ஆலய துணி பணியாளர்கள் ஆகியோரை பாதுகாப்பதற்காக அவர்களுக்கு அறநிலையத் துறை சார்பாக நிவாரண தொகை வழங்க வேண்டும்.

கர்நாடகத்தில் அர்ச்சகர்களின் குடும்பத்திற்கு மாதம் 6 ஆயிரம் வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுவை அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஆதிசைவ சிவாச்சார்ய சமூகத்தினர் பலர் கோவில்களில் பூஜை செய்து வருவதால் அவர்களுக்கு துறை ரீதியில் கணக்கிட்டு அர்ச்சகர்களை அமைப்புசாரா பணியாளர்கள் பட்டியலில் இணைத்து அரசு திட்டங்களில் பயன்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்றும் அவர் தனது கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அர்ச்சகர்கள் நலவாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோவில் பணியாளர்களுக்கென‌ சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த வேண்டுமென்றும் கோவில் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்க வேண்டும் என்றும் கொரோனாவால் உயிரிழக்கும் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar News