ஈபிள் டவரை விட உயரமான ரயில்வே பிரிட்ஜ்: சாதனை படைக்கப் போகும் இந்தியா!

Update: 2021-03-01 10:47 GMT

உலக அதிசயமான ஈபிள் டவரை விட அதிக உயரம் கொண்ட ரயில்வே பாலத்தை ஏறக்குறைய கட்டி முடித்து விட்டது இந்திய ரயில்வே. இதன் உயரம் 359 மீட்டர். காஷ்மீரை, நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் ரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியாக, காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில், செனாப் நதியின் குறுக்கே, 1,562 அடி நீள வளைவு இரும்பு பாலம் கட்டப்படுகிறது. கடந்த 2017 நவம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்த பாலம், 1,250 கோடி ரூபாய் செலவில், 1172 அடி (359 மீட்டர்) உயரத்தில் அமைக்கப்படுகிறது.


இது ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள உலக அதிசயமான ஈபிள் டவரைவிட உயரமானது. ஈபிள் டவரின் உயரம் 324 மீட்டர். அதை விட 35 மீட்டர் அதிக உயரம் கொண்டிருக்கிறது இந்த பாலம். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், இந்த மாதம் தயாராகிவிடும். இந்த பாலம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "உள்கட்டமைப்பின் அற்புதம் உருவாகிறது. முக்கிய மைல்கல்லை, இந்திய ரயில்வே எட்டுகிறது. செனாப் ஆற்றின் மேல் அமைக்கப்படும் செனாப் பாலம், உலகின் மிக உயர்ந்த ரயில்வே பாலமாக அமைக்கப்பட்டுள்ளது" என பதிவிட்டிருக்கிறார்.


 பாலத்தின் நீளம் 17 இடைவெளிகளுடன், 1,315 மீட்டர் இருக்கும்படியும், அதில் செனாப் ஆற்றின் குறுக்கே, பிரதான வளைவின் பரப்பளவு மட்டும் 467 மீட்டர் இருக்கும்படியும் பாலம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பாலம் பயங்கர குண்டுவெடிப்பையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படும் என, திட்டம் துவங்கிய போது, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகவும் உயரமான ரயில்வே பாலமாக இது வரலாறு படைக்க உள்ளது.

Similar News