ஏப்ரலில் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர்: இந்தியாவுடன் கைகோர்க்க திட்டம்!

Update: 2021-03-16 11:26 GMT

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பிரிட்டனுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், சீனாவிற்கு எதிரான ஒரு ஜனநாயக முன்னணியை வலுவாக்குவதற்கும் இந்த பயணத்தின் போது முக்கியத்துவம் கொடுக்கப்படும் என பிரிட்டன் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் நோக்கிலும், அமெரிக்காவுடனான தனது வலுவான உறவுகளைப் பாதுகாக்கும் நோக்கிலும், பிரிட்டிஷ் அரசாங்கம் இன்று நாட்டின் பிரெக்சிட்டுக்கு பிந்தைய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளை முன்வைக்க உள்ளது.


 இந்தோ-பசிபிக் முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகின் புவிசார் அரசியல் மையமாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்ட பிரிட்டன் அரசாங்கம், பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னர் ஒத்திவைக்கப்பட்ட பயணத்தை மீண்டும் ஏப்ரலில் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தின சிறப்பு விருந்தினராக இந்தியாவிற்கு ஜனவரியில் வரவிருந்தார். ஆனால் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாலும், ஒரு புதிய வகை கொரோனா பரவுவதாலும், அவர் தனது வருகையை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் பிரிட்டனின் 5 ஜி நெட்வொர்க்கில் சீன நிறுவனமான ஹவாய்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பிரிட்டனின் ராணி எலிசபெத் விமானம் தாங்கி போர்க் கப்பல் பயன்படுத்தப்படுவது தென் சீனக் கடலில் இராணுவ பதட்டங்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் பிரதமரின் இந்திய பயணம் அதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு பிரிட்டனில் இந்த ஆண்டு நடக்கும் மிக முக்கிய ஜி 7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பிரிட்டன் வருமாறு அவர் பிரதமர் மோடிக்கு நேரடியாக அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News