உலகின் கொரோனா தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்யும் இந்தியா: பிரதமர் பெருமிதம்!

Update: 2021-03-17 11:43 GMT

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது இந்தியா தனது உள்நாட்டு போராட்டத்துடன், உலகின் தேவைகளையும் கவனித்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று பின்லாந்து பிரதமர் சன்னா மரின் உடன் நடந்த வீடியோ கான்பெரன்ஸ் உச்சி மாநாட்டில் தெரிவித்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 58 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தடுப்பூசி அளவுகள் சமீபத்திய வாரங்களில் சுமார் 70 நாடுகளை எட்டியுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.


 இந்தியா மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகளும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட, வெளிப்படையான, மனிதாபிமான மற்றும் ஜனநாயக உலகளாவிய ஒழுங்கை நம்புவதாகவும், தொழில்நுட்பம், புதுமை, தூய்மையான எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் கல்வி போன்ற துறைகளில் இரு நாடுகளும் வலுவான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார். மேலும் சர்வதேச சூரியக் கூட்டணி மற்றும் பேரழிவை தடுக்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியில் பின்லாந்து இணைய வேண்டும் என மோடி வலியுறுத்தினார். இந்த இரு அமைப்புகளும் இந்தியாவின் முன்முயற்சியில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 "பின்லாந்து இணைவதன் மூலம் இந்த சர்வதேச அமைப்புகள் பின்லாந்தின் திறன் மற்றும் நிபுணத்துவத்தால் பயனடையும்" என்று அவர் கூறினார். அப்போது பேசிய பின்லாந்து பிரதமர் சன்னா மரின், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் தீவிரப்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறினார். முன்னதாக, வீடியோ கான்பெரன்ஸ் உச்சிமாநாடு இந்தியா-பின்லாந்து கூட்டாட்சியின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் பல்வகைப் படுத்தலுக்கான ஒரு வரைபடத்தை வழங்கும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News