புஞ்சை புளியம்பட்டியில் உள்ள முனியப்பன் கோவில் ஒன்று தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவத்தினால் அப்பகுதியில் உள்ள பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டி என்னும் கிராமத்தில் முனியப்பன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிராமத்தில் உள்ள கோவில் என்பதால் திருவிழா நேரங்களில் இந்த கோவிலில் விழாக்கள் களைகட்டும்.
இந்த முனியப்பன் சாமி கோவில் ஓலை கொட்டகையால் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கோவிலில் தினமும் நடக்கும் வழக்கமான பூஜைகளை முடித்து விட்டு கோவில் பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீடு சென்றுள்ளார். நள்ளிரவு திடீரென்று கோவிலில் உள்ள ஓலைக் கொட்டகை தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கோவிலுக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ மளமளவென பரவ தொடங்கியதும் அப்பகுதி மக்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. எனவே சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால் கோவில் முழுவதும் எரிந்து நாசமானது. நள்ளிரவு நேரத்தில் கோவிலில் எப்படி தீப்பிடித்தது என்று புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த மர்ம நபர் சிகரெட் அல்லது பீடியை அணைக்காமல் தூக்கி போட்டதால் தீப்பிடித்து கோவில் எரிந்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. கோவில் தீ பிடித்து எரிந்த செய்தியைக் கேட்ட அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.