அஸ்ட்ரா ஜெனகா கொரோனா தடுப்பூசி: முதல் டோஸை செலுத்திக் கொண்டார் இங்கிலாந்து பிரதமர்!

Update: 2021-03-20 11:27 GMT

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு எதிராக பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கியது. இந்த மருந்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகாவின் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ஏற்படுவதாக புகார் எழுந்தன.


 இதனால் அந்த தடுப்பு மருந்துக்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தற்காலிக தடை விதித்தன. ஆனால் ஆக்ஸ்போர்டின் தடுப்பூசியால் ரத்த உறைவு ஏற்படுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய மருந்து ஒழுங்கு முறை ஆணையமும் தெரிவித்துள்ளன. இதையடுத்து தற்போது மீண்டும் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசிக்கு பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தான் ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பு மருந்தை செலுத்தப் போவதாக சமீபத்தில் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.



 அதன்படி பிரதமர் போரிஸ் ஜான்சன், அஸ்ட்ரா ஜெனகா கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை நேற்று செலுத்திக் கொண்டார். இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், "கொரோனா பெருந்தொற்று காரணமாக நாம் இழந்துவிட்ட பழைய வாழ்க்கை முறையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் சிறந்த வழி. அனைத்து விஞ்ஞானிகளுக்கும், மருத்துவ நிபுணர்களுக்கும் நன்றி, அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்

Similar News