பிரதமரை சந்தித்தார் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர்: பேச்சுவார்த்தை தொடங்கியது!

Update: 2021-03-20 11:28 GMT

அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் நேற்று மாலை இந்தியாவுக்கு வந்தடைந்த நிலையில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் விரிவான கலந்துரையாடலுக்கு திட்டமிட்டுள்ள நிலையில் முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

பிரதமர் ஆஸ்டினை வரவேற்று இரு நாடுகளுக்கும் இடையிலான அன்பான மற்றும் நெருக்கமான உறவை அடிக்கோடிட்டுக் காட்டினார். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கூட்டாண்மைக்கான தனது பார்வையை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். மேலும் இந்தியா-அமெரிக்க உறவுகளில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கிய பங்கை வலியுறுத்தினார்.


பின்னர் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் புதுடெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சரை சந்திப்பதற்கு முன்பு அவர் நாளை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா- அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள், போர்க்குணமிக்க சீனாவை எதிர்கொண்டு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை அதிகரிப்பது மற்றும் ஆப்கானிஸ்தான் சமாதான முன்னெடுப்புகள் ஆகியவை குறித்து நாளை ஆஸ்டினும் ராஜ்நாத் சிங்கும் சந்திக்கும் போது நிகழ்ச்சி நிரலில் உள்ள சில முக்கிய விவகாரங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் புதிய அமைச்சரவையில் இருந்து ஒரு உயர் அதிகாரி இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் பயணம் ஆஸ்டினுடையது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றின் உயர்மட்ட தலைமை முக்கியமான இந்தோ-பசிபிக் பகுதியில் தங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதாக உறுதியளித்த சில நாட்களுக்கு பின்னர் இந்த பயணம் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது.

Similar News