காலநிலை மாற்றத்தின் கோரத் தாண்டவத்தை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா!

Update: 2021-03-22 11:46 GMT

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணத்தில் இன்று மீண்டும் பெய்த மழையால், நூற்றாண்டு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை மிக மோசமடைந்துள்ளது. இதனால் 18,000 மக்கள் வீடுகளை காலி செய்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. சிட்னியின் சில பகுதிகள் உட்பட நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸின் கடலோரப் பகுதிகள் சில நாட்களாக பெய்துவரும் கன மழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.


ஒரு வருடத்திற்கு முன்பு இந்த பகுதி நீடித்த வறட்சி, காட்டுத் தீ மற்றும் நீர்த் தட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக விளங்கியது. இந்நிலையில் தற்போது கனமழையால் வெள்ளக்காடாக மிதக்கிறது. இதற்கு காரணம் காலநிலை மாற்றம் தான் எனக் கூறியுள்ள ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் இனி அடிக்கடி தீவிரமான வானிலை நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம் என்று எச்சரித்துள்ளனர்.

சுமார் 18,000 பேரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளதுடன், 38 பிராந்தியங்கள் பேரழிவு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 8 மில்லியன் மக்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், முடிந்தால் வீட்டிலிருந்தே சில நாட்களுக்கு பணியை செய்யுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



தூய்மைப்படுத்துதலுக்கும் மீட்புக்கும் உதவ ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படை அழைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவசர சேவைகளுக்கு குறைந்தது 8,800 அழைப்புகள் உதவிக்கு வந்துள்ளன மற்றும் நெருக்கடி தொடங்கியதிலிருந்து நூற்றுக்கணக்கான மக்களை வெள்ளநீரில் இருந்து மீட்டன. மேலும் விவசாயிகள் வளர்த்து வந்த கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பல இடங்களில் இருந்தும், மீட்புக் குழுவினர் நிராதவராக நின்ற கால்நடைகளை மீட்டு சிகிச்சை மற்றும் உணவுகளை அளித்து வருகின்றனர்.

Similar News