குடிகாரர்களின் கூடாரமான கோவில் குளம் - உடனே நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை!
சென்னையில் கோவில் குளம் ஒன்று பராமரிக்கப்படாமல் இருப்பதால் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்வதால் அப்பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கோவில் குளம் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ள அவல நிலையை கண்டு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னை குரோம்பேட்டையில் திருநீர்மலையில் ரங்கநாத பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். விசேஷ நாட்களில் இங்கு பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக காணப்படும். இந்த கோவிலுக்கு சொந்தமாக குளம் ஒன்று அதன் அருகே உள்ளது.
இந்த கோவில் குளத்தை பராமரிக்க வேண்டிய கோவில் நிர்வாகமும் அறநிலையத்துறையும் அவர்களின் பணியை சரிவர செய்யாமல் இருப்பதன் காரணமாக கோவில் குளம் குப்பை கொட்டும் மையமாக மாறி உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அந்த கோவில் குளத்தில் மீது அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மாலை நேரத்தில் கோவிலுக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் குடிமகன்கள் குடித்துவிட்டு அங்கு வருபவர்களிடம் அத்துமீறும் சம்பவம் அரங்கேறும் என்று மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் பராமரிக்கப்படாமல் இருக்கும் குளம் என்பதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் தாங்கள் பயன்படுத்தும் குப்பைகளை கோவில் குளத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலில் குளம் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது கண்டு அப்பகுதி பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே இந்த கோவில் குளத்தை உடனடியாக பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர். மேலும் கோவில் குளங்கள் பராமரிக்கப்பட்டால் மட்டுமே அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் கோடைகாலங்களில் நீர் பற்றாக்குறை இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.