கூன் பாண்டியனுக்குக் கோவில் - கல்வெட்டில் கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்!

Update: 2021-04-09 10:24 GMT

மதுரை நகரின் வரலாற்றிலும் சைவ சமயத்தின் வரலாற்றிலும்‌ மிக முக்கியப் பங்கு வகிப்பவர் பாண்டிய மன்னர் கூன் பாண்டியன் என்றறியப்படும் நின்ற சீர் நெடுமாறன். சைவத்தைப் பின்பற்றி அன்னை மீனாட்சி மற்றும் அப்பன் சொக்கநாதரின் வழியில் ஆட்சிபுரிந்த பாண்டிய மன்னர்களுக்கு மத்தியில் இந்த கூன் பாண்டியனுக்கு மட்டும் ஏனோ சமண சமயத்தின் பால் ஈர்ப்பு உண்டாகி இருக்கிறது.

மன்னன் சமண மதத்தைத் தழுவ மக்களும்‌ அதிகளவில் சமணத்தைத் தழுவி இருக்கிறார்கள். ஆனால் பட்டத்தரசி மங்கையர்க்கரசியும் அமைச்சர் குலச்சிறையாரும் சைவ சமயத்திலேயே தொடர, பிரச்சினை எழுந்தது. அப்போது அவர்கள் திருஞானசம்பந்தரை அணுக, அவரை தோற்கடிக்க சமணர்கள் சதி செய்ததாக கூறப்படுகிறது. சம்பந்தர் தங்கி இருந்த மடத்திற்கு அவர்கள் தீ வைக்க, சம்பந்தர் ஒரு‌ பதிகம் பாடி தீயை அணைத்தார்.

ஆனால் அந்தத் தீ மன்னன் கூன் பாண்டியனின் உடலை வெப்பு நோயாக ஒட்டிக் கொண்டது. சமணர்கள் செய்த வைத்தியம் பலனளிக்காது போக, சம்பந்தரை வரவழைக்க எத்தனித்தார் அரசி. "என் நோயைத் தீர்த்தால் மீண்டும் சைவம் திரும்புவேன்" என்று கூன் பாண்டியன் வாக்களித்திருக்கிறான். அவ்வாறே "மந்திரமாவது நீறு" என்று பாடி சம்பந்தர் நோயைத் தீர்க்க, மன்னன் சைவம் திருப்பியதோடு அவனது கூனும் நிமிர்ந்ததாகவும், பின்னர் நின்ற சீர் நெடுமாறன் என்று அறியப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

ஆலவாய் அப்பன் ஆட்சி செலுத்தும் மதுரையம்பதி சமண தேசமாக மாறாதிருந்ததில் இந்த நிகழ்வு மிக முக்கியமானது என்பதால், ஆன்மீக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் கூன் பாண்டியன் முக்கியத்துவம் பெறுகிறார். இப்படிப்பட்ட பின்னணி கொண்ட கூன் பாண்டியனைப் பற்றிய ஒரு கல்வெட்டு தான் அண்மையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் தென்பரங்குன்றம் மலையில் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மதுரை திருமலை நாயக்கர் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்டறிந்த இந்த கல்வெட்டு 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. மூன்று அடி உயரமும், ஒரு அடி அகலமும் கொண்ட இந்த கல்வெட்டு 18-19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் இதில் 20 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கல்வெட்டில் "நாகலாபடி வீரசின்னு சேர்வைக்காரன் மகன் உத்தண்டராமன் சேர்வைக்காரன், கூன்பாண்டியன் கோயில் முன் தண்ணீர் பந்தலும், நந்தவனமும், கிணறும் கட்டி உபயம் செய்தது தொடர்பாக எழுதப்பட்ட ஓர் தான உபயக்கல்வெட்டு" என்று எழுதப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் கிரிவலப் பாதையில் பக்தர்கள் தண்ணீர் குடிக்க கிணறு, தண்ணீர்ப் பந்தல், இளைப்பாற நந்தவனம் ஆகியவை அமைக்கப்பட்டது தெரிய வருகிறது.

மேலும் கூன் பாண்டியன் கோயில் முன் தண்ணீர்ப் பந்தல் அமைத்ததாகக் குறிப்பிட்டு இருப்பதால் இந்தப் பகுதியில் அவருக்கு ஒரு கோவில் இருந்ததும் தெரிய வருகிறது. இது ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி செலுத்திய பாண்டிய மன்னனைக் குறிக்கிறது என்றும் கோவில் அழிந்திருக்கலாம் அல்லது வேறு பெயரில் தற்போது வழங்கப்படலாம் என்றும் கூறும் ஆய்வாளர்கள், அடுத்ததாக இந்தக் கோவில் குறித்து விரிவான ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News