ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் சொத்துக்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி!

Update: 2021-04-11 10:48 GMT

சேலம் பெருமாள் கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக இந்து அறநிலையத்துறை மற்றும் வருவாய்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் உள்ளது. இவற்றில் பல ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த கோவிலின் மொத்த சொத்துக்களின் மதிப்பு 50 கோடி ரூபாய் இருக்கும் என்றும் இவற்றில் பல்வேறு சொத்துக்கள் அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் துணையோடு ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கோவில் நிலங்களை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் சொத்துக்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு தகுதியான நபரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அறநிலைத்துறை மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்று இந்து அறநிலையத் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள் அறநிலையத் துறையால் நியமிக்கப்படும் தகுதியான நபர் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று இந்து அறநிலையத்துறை மற்றும் வருவாய்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் அடுத்த கட்ட விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Similar News