புதுச்சேரியில் கோவில் உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த ஒரு லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தில் வில்லியனூர் மெயின் ரோட்டில் செங்கழுநீரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த கோவிலில் காலை மாலை என இரு வேளைகளும் பூஜை நடப்பது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் வழக்கம்போல் கடந்த 9ஆம் தேதி இரவு கோவில் பூசாரி வழக்கமான பூஜைகள் முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு வீடு சென்றுள்ளார்.
மறுநாள் காலை கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் பக்கவாட்டு கதவு உடைந்து இருந்ததை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார். கோவிலின் கேட்டை உடைத்து மர்ம நபர்கள் கோவிலுக்குள் சென்று அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். உடனடியாக இது தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகார் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோவில் அருகே உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். உண்டியலில் ஒரு லட்ச ரூபாய் அளவிற்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த பணம் இருந்திருக்கும் என்று பூசாரி தெரிவித்துள்ளார். கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.