திருவரங்குளம் அழகம்மாள் கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ஒரு லட்சம் மதிப்புள்ள கோவில் நகை மற்றும் பூஜைப் பொருள்களை எடுத்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவரங்குளம் அருகே அழகம்மாள்புரத்தில் அழகம்மாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வருகிறது. இந்த கோவிலில் தினமும் வழக்கமான பூஜைகள் காலை மாலை என இரண்டு வேளைகளிலும் நடப்பது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கமான பூஜைகளை முடித்த கோவில் பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீடு சென்றுள்ளார்.
மறுநாள் காலை கோவிலை திறக்க வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்சியடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த பணங்கள் திருட்டு போய் இருப்பதை உறுதி செய்தார். பின்னர் கோவிலில் இருந்த பூஜைப் பொருள்கள், குத்துவிளக்கு மற்றும் கோவிலில் உள்ள மின்சாதன பொருட்களையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கொள்ளையடிக்கப்பட்ட கோவில் பொருட்களின் மொத்த மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என்று பூசாரி தெரிவித்தார். இதுகுறித்து வல்லத்திராகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவிலை சுற்றி உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிலை,நகை என விலைமதிப்பற்ற பொருள்கள் இருக்கும் நிலையில் அனைத்து கோவில்களிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்தி தினமும் கண்காணிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.