கோவை ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச் 11-ம் தேதி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதில் தமிழ், தெலுங்கு மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த நாட்டுப் புற கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளது.
"சிவனின் அருள் நிறைந்த இரவு" என்று வழங்கப்படும் மஹாசிவராத்திரி இரவு, நம் இந்திய ஆன்மீகக் கலாச்சாரத்தில் மிக மிக முக்கியமான ஒரு விழாவாக இருந்து வருகிறது. இதன்காரணமாக, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஈஷாவின் 27-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மார்ச் 11-ம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 12-ம் தேதி காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது.
இந்தாண்டு கொரோனா பாதிப்பு சூழல் நிலவுவதால் அரசின் வழிகாட்டுதல்படி, அதிகளவில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் மிக குறைவான எண்ணிக்கையிலான மக்களே நேரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. மேலும், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை, சமூக இடைவெளி, முக கவசம் அணிவது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விழா அரசின் அனைத்து வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் பின்பற்றி மிகுந்த பாதுகாப்புடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சத்குருவுடன் நள்ளிரவு தியானம்
சத்குரு முன்னிலையில் நடக்கும் இவ்விழா தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்கும். லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைச்சாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா விடிய விடிய களைக்கட்ட உள்ளது.