தமிழகத்திலும் கொரோனா பரவலின் 2வது அலை: பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை!

Update: 2021-03-24 11:23 GMT

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2வது அலை உருவாகியுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றுக்கு ஆளாபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.


இந்நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சமீபத்தில் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும், முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டன.


கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலின் 2வது அலை உருவாகியுள்ளது என்றும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது மற்றும் அனைவரும் வெளியில் வரும்போது முக கவசம் அணிந்து வரவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Similar News