இந்த 7 கேள்விகளுக்கு ஸ்டாலின் பதில் கூறத் தயாரா? பாஜக தலைவர் எல்.முருகன்!
மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் ஏழு திட்டங்களை தங்களின் 7 தொலைநோக்கு திட்டங்கள் என்று தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் தன்னுடைய 7 கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக உள்ளாரா என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் முருகன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலினிடம் 7 கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் முதலாவதாக நில அபகரிப்புக்கு பெயர் பெற்ற தி.மு.க. இனிமேல் நில அபகரிப்பு செய்ய மாட்டோம் என்று உறுதி அளிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழலில் திளைத்த தி.மு.க. இனிமேல் ஊழல் செய்ய மாட்டோம் என்று கூற முடியுமா என்றும், தி.மு.க. பிரமுகர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் நிலையில் ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து செய்ய மாட்டோம் என்று கூற முடியுமா என்றும், இந்து கடவுள் நம்பிக்கைகளை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்த மாட்டோம் என்று உறுதி அளிக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தலித் சமூகத்தினரை இழிவு படுத்தி தி.மு.க. அரசியல் செய்து வரும் நிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க தயாரா அல்லது குறைந்தபட்சம் கட்சியின் தலைவராக நியமிக்க தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பெண் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டம் என்று அறிவித்துள்ள ஸ்டாலின் குறைந்தபட்சம் தங்கள் கட்சியில் உள்ள சட்டமன்ற வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வாரா என்றும் இறுதியாக வாரிசு அரசியலுக்கு பெயர் பெற்ற தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் வாரிசு அரசியலை முன்னெடுக்க மாட்டேன் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பாரா என்பது போன்ற 7 கேள்விகளை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் முருகன் எழுப்பியுள்ளார்.