99 ஆண்டு குத்தகைக்கு மிஷனரிகள் மலையை ஆக்கிரமிப்பு? - கொதிக்கும் செங்கல்பட்டு மக்கள்!

Update: 2021-06-07 13:32 GMT

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பகுதியில் உள்ள வஜ்ரகிரி மலையை கிறிஸ்தவ மிஷனரிகள் சுமார் 60 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு அதில் இந்து மக்களை நுழையவிடாமல் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர் என்று புகார்கள் எழுந்த நிலையில் தற்போது இந்து முன்னணி அமைப்பினர் வஜ்ரகிரி மலையை மீட்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

வஜ்ரகிரி மலையில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்று உள்ளது என்பதை நாம் எத்தனை பேர் அறிவோம். ஆம்! தற்போது அங்கு 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் இருந்ததற்கான அடையாளமே தெரியாத அளவிற்கு கிறிஸ்தவ மிஷனரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் மேலே ஒரு இந்துக் கோயில் இருப்பதை மறைப்பதற்காக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஏராளம்.

சென்னையிலிருந்து சுமார் 95 கி.மீ. தொலைவில் மேல்மருவத்தூரை அடுத்து அச்சிறுபாக்கத்திலுள்ள ஒரு சிறு மலைத்தொடரில் மலை உச்சியில் ஒரு பாழடைந்த கட்டிடம் ஒன்று பார்த்திருப்பீர்கள். அது வெறும் கட்டிடம் மட்டுமல்ல இந்துக்களின் வரலாறு கிறிஸ்தவ மிஷனரிகளால் அழிக்கப்பட்டதற்கான சான்றாகும்.

இந்தக் கோவில் 1500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பசுபதீஸ்வரர் உடனுறை மரகதாம்பிகை என்ற சிவாலயமாகும். இந்த சிவாலயம் தான் தற்போது பாழடைந்த கட்டிடமாக காணப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு இரண்டு வழிகளை பல நூறு வருடங்களுக்கு முன்னரே நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். ஒன்று செங்குத்தான படிக்கட்டுகள் மூலம் மலை உச்சியை அடையலாம். மற்றொன்று மலைக்கு பின்புறமாக வாகனங்கள் மூலம் செல்வதற்கான பாதை ஒன்றும் உள்ளது. ஆனால் இந்த வஜ்ரகிரி மலையை 1960களில் ஆக்கிரமிக்கத் தொடங்கிய கிறிஸ்தவர்கள் தற்போது மலை உச்சியிலும் அடிவாரத்திலும் பிரம்மாண்டமான 'மழைமலை மாதா அருள்தலம்' என்ற ஒரு தேவாலயத்தை கட்டி உள்ளனர். மலை முழுவதும் சிலுவையை வைத்து ஆக்கிரமித்துள்ளனர்.

இந்த வஜ்ரகிரி மலைக்கு செல்லும்போது வெளியிலிருந்து பார்த்தால் 'மரியே வாழ்க' என்ற வரிகள் பளிச்சென்று அனைவரும் கண்ணிலும் படும்படி நிறுவியுள்ளனர். மலை உச்சியில் இருக்கும் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வாகனங்களில் செல்வதற்கான பாதை இருக்கும் இடத்தில் ஒரு அலங்கார நுழைவு வாயிலை சர்ச் நிர்வாகம் அமைத்துள்ளது. இதனால் மேலே பசுபதீஸ்வரரையும், மரகதாம்பிகையையும் தரிசிக்க செல்லும் பக்தர்கள் சர்ச் அலங்கார வளைவுக்குள் நுழைந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பாதையில் தற்போது முள் வேலிகள் அமைத்து வாகனங்கள் செல்ல முடியாத படி தடுத்து விட்டனர்.

இருப்பினும் பக்தர்கள் ஒன்று சேர்ந்து தற்காலிக பாதை ஒன்றை அமைத்துள்ளனர். ஆனால் அந்தப் பாதையையும் அங்கு ஆக்கிரமித்து வசித்துவரும் கிறிஸ்தவர்கள் குப்பைகளை கொட்டி நாசம் செய்துள்ளனர். மேலே இருக்கும் சிவாலயத்திற்கு செல்லும் பாதையை முழுவதுமாக அழித்துவிட்டால் மலை முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்துவிடலாம் என்ற காரணத்தினாலேயே கிறிஸ்தவர்கள் மலைக்கு செல்லும் பாதையை தடுத்து வருகின்றனர் என்பது இந்துக்களின் கருத்தாக இருக்கிறது.

மேலும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சிவாலயத்தை புனரமைக்க தங்களால் முடிந்த ஏற்பாடுகளை செய்ய தொடங்கினர். ஆனால் கோடிகளைக் கொட்டி எல்லாவற்றையும் வளைக்கும் ஆற்றல் படைத்த கிறிஸ்தவ பாதிரியார்களை இந்த கிராமத்து இளைஞர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்.

இருந்தபோதிலும் மலை உச்சிக்குச் செல்லும் பாதையில் மின்விளக்குகளை அமைத்து `சிவசிவ' என்ற எழுத்துக்கள் மின்னும் மின்சார போர்டையும் மலை உச்சியில் அமைத்தனர். பின்னர் மலையில் புதிதாக போர்வெல் போட தீர்மானித்து தண்ணீர் தொட்டிகளை கூட கட்டிவிட்டனர். ஆனால் அப்போது கடமை மாறாத வனத்துறையினர் அந்த பணிகளை தடுத்து நிறுத்தி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வனத்துறையை கேட்காமல் எந்த செயலும் செய்யக் கூடாது என்று தடுத்து நிறுத்திவிட்டனர்.

அப்போது சர்ச்சுக்கு மட்டும் எல்லா சலுகைகளையும் கொடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர்கள் இந்த மலையை 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.

எனவே மலையில் உள்ள பசுபதீஸ்வரர் கோவிலை உடனடியாக மீட்டு எடுக்க வேண்டும் என்று அச்சிறுபாக்கம் இந்துக்கள் பல கோரிக்கைகளை விடுத்துள்ளனர். அவை

1. மலை உச்சியில் உள்ள கோவிலுக்கு செல்வதற்கு பாதை அமைத்து தர வேண்டும்.அதேபோல் கிறிஸ்தவர்கள் கட்டியுள்ள அலங்கார வளைவினை அகற்றிவிட்டு பசுபதீஸ்வரருக்கு நுழைவு வாயில் கட்ட வேண்டும்.

2. ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள பசுபதீஸ்வரருக்குச் சொந்தமான வஜ்ரகிரி மலையை கிறிஸ்தவ மிஷனரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

3. வஜ்ரகிரி மலையில் உள்ள பாறைகளை உடைத்து விற்பனை செய்யக்கூடாது.

4. இப்பகுதியில் மதமாற்று நடவடிக்கையில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஈடுபடக்கூடாது.

5. பசுபதீஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகளையும் மின்சார போர்டு களையும் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. கிறிஸ்தவ மிஷனரிகளால் மலை முழுவதும் போடப்பட்டிருக்கும் முள்வேலிகளை அகற்ற வேண்டும்.

7. 99 வருடங்கள் குத்தகைக்கு எடுத்ததாக பாதிரியார்கள் தெரிவித்ததற்கு வனத்துறை தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்நிலையில்தான் மழைமலை மாதா சர்ச் நிர்வாகத்தால் அரசு புறம்போக்கு நிலம் (சுமார் 60 ஏக்கர்) அபகரிப்பு செய்யப்பட்டது என்று இந்து முன்னணி பொறுப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் மாவட்ட நிர்வாகம் 8 வாரங்களுக்குள் சரியான முறையில் இடத்தை ஆய்வு செய்து அந்த இடத்தைப் பற்றிய உண்மையான தகவல்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு நீதிபதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக 4-6-2021 வெள்ளிக்கிழமை மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மிக விரைவில் அந்த நிலம் மீட்கப்படும் என்று அனைவரும் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

Source: Hindu Munnani & Mission Kali

Similar News