வதந்திகளுக்கு பதிலடி! மத்திய அரசுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி மையங்களை அடையாளம் காண உதவும் கூகுள்!
மக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களை அடையாளம் காணும் வசதியை கூகுள் தேடுதளம் வழங்க உள்ளது.
கூகுளின் கூகுள் சர்ச், மேப்ஸ், அசிஸ்டன்ட் உள்ளிட்ட தனது பிரிவுகளுக்கு சென்றால் கொரோனா தடுப்பூசி மையங்களை அடையாளம் காணும் வசதியை கூகுள் வழங்க உள்ளது.
இது பற்றிய தவறான தகவல்களும் இணையத்தில் வரத்தொடங்கியுள்ளன. தவறான தகவல்களைத் தடுக்க, தடுப்பூசிகளைப் பற்றிய துல்லியமான, அறிவியல் அடிப்படையிலான தகவல்களை மக்களுக்கு வழங்க கூகிள் நடவடிக்கை எடுத்துள்ளது.
COVID-19 பற்றி பயனர்களுக்கு உண்மை தகவல்களை வழங்குவதற்காக, தடுப்பூசிகளைப் பற்றிய துல்லியமான மற்றும் அறிவியல் அடிப்படையிலான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தேடல் நிறுவனமானது சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றுடன் ஒத்துழைத்துள்ளது.
தடுப்பூசி தொடர்பான கேள்விகளைக் கேட்கும் மக்களுக்கு அதிகாரப்பூர்வ மற்றும் சரியான நேரத்தில் தகவல்களை வெளியிடுவதற்கு எங்கள் குழுக்கள் கடுமையாக உழைத்துள்ளன.
தடுப்பூசி இயக்கத்தைச் சுற்றியுள்ள அறிவியல் அடிப்படையிலான தகவல்களை பெருக்க சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றுடன் நாங்கள் பணியாற்றியுள்ளோம்.
மேலும் தவறான தகவல்களைக் கண்காணிக்கும் குழுவுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம் என்று கூகிள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தடுப்பூசிகளைப் பற்றிய செயல்திறன், பாதுகாப்பு, விநியோகம், பக்க விளைவுகள் மற்றும் இன்னும் பலவற்றையும் கூகுள் பேனல்கள் காண்பிக்கின்றன. ஆங்கிலம் மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, இந்தி உள்ளிட்ட எட்டு இந்திய மொழிகளிலும் இந்த தகவல்கள் கிடைக்கின்றன.