சென்னையில் NIA அலுவலகம் - நக்சல் ஆதரவாளர் மீது விசாரணை தொடக்கம்!

Update: 2021-04-09 06:01 GMT

தீவிரவாதிகளைக் கண்காணித்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து தண்டனை வாங்கித் தருவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் தேசிய புலனாய்வு முகமையின் முழுமையாக செயல்படக் கூடிய அலுவலகம் சென்னையில் புதிதாகத் திறக்கப்பட்டு நேற்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

தீவிரவாதிகளின் நடமாட்டம், தகவல் பரிமாற்றம், நிதி சேகரிப்பு மற்றும் பணப் பரிமாற்றம் போன்றவற்றை கண்காணிக்கும் பணியில் தேசிய புலனாய்வு முகமை ஈடுபட்டுள்ளது. இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் செயல்பட்டு வருகிறது. எனினும் தீவிரவாதிகள் நடமாட்டம் மற்றும் செயல்பாடு அதிகம் உள்ள இடங்களில் கிளை அலுவலகங்களை நிறுவி தேசிய புலனாய்வு முகமை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

எனினும் தமிழ்நாடு தொடர்பான வழக்குகள், சம்பவங்களை கேரளாவில் கொச்சியில் அமைந்திருக்கும் தேசிய புலனாய்வு முகமையின் கிளையே விசாரித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் சென்னையில் முழு நேரமும் செயல்படக் கூடிய அலுவலகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து தற்போது புரசைவாக்கத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டு ஏப்ரல் 7 முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. இதற்கு தமிழக ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீஜித் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அதிகாரப்பூர்வமாக இங்கு அலுவலகம் செயல்படத் தொடங்கியதாக அறிவிக்கப்பட்ட பின்னரே இந்த அலுவலகத்தில் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் அது வரை டெல்லியில் பதிவு செய்யப்பட்டு விசாரணையை சென்னை அலுவலகம் நடத்தும் என்றும் கூறப்படுகிறது.

அண்மையில் நக்சல் ஆதரவாளர், சமூக ஆர்வலர் ஜே.விவேக் என்பவர் தனது முகநூலில் பதிவிட்டது தொடர்பாக டெல்லியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சென்னை அலுவலக அதிகாரிகள் விசாரிப்பர் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News