கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு படையிடம் ஆலோசனை - ராஜ்நாத் சிங்!
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தங்களின் ஆதரவை அளித்து வரும் ராணுவ அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு படைகளின் முயற்சிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காணொளி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு படை அதிகாரிகளும் காணொளி காட்சி மூலம் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர். சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் சுமார் 600 கூடுதல் மருத்துவர்கள் பணியமர்த்த பட்டுள்ளதாகவும், பல்வேறு மருத்துவமனைகளில் உதவுவதற்காக 200 போர்க்கள செவிலியர்கள், உதவியாளர்களை இந்திய கடற்படை அனுப்பி உள்ளதாகவும் பாதுகாப்பு துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் மற்றும் ஹரியானாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு 300 தேசிய மாணவர் படையினர் மற்றும் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்றும், மேலும் பல்வேறு மாநிலங்களில் 720 க்கும் அதிகமான படுக்கைகளை இந்திய ராணுவம் கிடைக்க செய்துள்ளதாகவும், மாநில மற்றும் மாவட்ட அளவில் உள்ள உள்ளூர் நிர்வாகங்களிடம் தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு ராணுவத்தை பாதுகாப்பு அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் உள்ளூர் நிர்வாகத்திற்கு உள்ளூர் ராணுவ தலைமையகங்கள் திறம்பட உதவ வேண்டும் என்று ஜெனரல் பிபின் ராவத் ஆலோசனை கூறினார்.
DRDOவால் லக்னோவில் அமைக்கப்பட்டு வரும் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை இன்னும் சில நாட்களில் செயல்படத் துவங்கும் என்று பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது மேலும் வாரணாசியில் அமைக்கப்பட்டு வரும் ஒரு மருத்துவமனை மே 5 ஆம் தேதியன்று தயாராக இருக்கும். பிஎம் கேர்ஸ் நிதியின் மூலம் உருவாக்கப்பட்டு வரும் 380 ஆக்சிஜன் ஆலைகளில் முதல் நான்கு புதுதில்லியில் உள்ள மருத்துவமனைகளில் அடுத்த வாரம் நிறுவப்படும் என்று DRDO தலைவர் தெரிவித்தார்.