'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் விவகாரத்தில் மறுபரிசீலனை' - பாகிஸ்தான் ஊடகவியலாளரிடம் பேசிய காங்கிரஸ் தலைவர்!

Update: 2021-06-12 14:33 GMT

கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய பா.ஜ.க அரசு ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை (Article 370)  ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை  யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என பாகிஸ்தானிய ஊடகவியலாளரிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய சிங் பேசிய ஆடியோ பெரும் சர்ச்சையாகி வருகிறது.

பாகிஸ்தானிய ஊடகவியலாளரிடம் 'கிளப் ஹவுஸ்' வலைதளம் மூலம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய சிங் பேசிய ஆடியோவை பா.ஜ.க கட்சியின் சமூக ஊடக பிரிவு தலைவர் அமித் மால்வியா வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் திக் விஜய சிங் பேசியபோது "மத்திய பா.ஜ.க அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ நீக்கியதில் இருந்து காஷ்மீரில் ஜனநாயகம் இல்லை. அனைவரையும் அவர்கள் சிறைச்சாலையில் அடைத்ததால் அங்கு மனிதாபிமானம் இல்லை. மதச்சார்பின்மையின் அடிப்படையே காஷ்மீரியர்கள் தான். ஏனென்றால் முஸ்லீம்கள் அதிகம் உள்ள அங்கு இந்து மன்னர் ஆட்சி செய்தார். இரு தரபினரும் இணைந்து செயல்பட்டனர். அரசுப்பணிகளில் கூட காஷ்மீரி பண்டிதர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்தது மிகவும் சோகமான முடிவு. காங்கிரஸ் ஆட்சிக்கு  வந்த உடன் இந்த முடிவு குறித்து மறு ஆய்வு செய்யப்படும்" என்று பேசினார்.

ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட முடிவு குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என பாகிஸ்தானிய ஊடகவியலாளரிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கூறியுள்ள சம்பவம் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவர் பேசிய அந்த ஆடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது. இதனால் காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News