ராமர் கோவில் விவகாரத்தை மீண்டும் அரசியலாக்கும் காங்கிரஸ்? : தெளிவாக விளக்கிய ராமர் கோவில் அறக்கட்டளை!
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி விரைவாக நடந்து வருகிறது. இந்த கோயில் கட்டுவதற்காக இந்தியாவின் பல இடங்களில் இருந்து ராமர் கோயில் அறக்கட்டளைக்கு பண உதவிகள் வழங்கப்பட்டன. இந்த சமயத்தில் ராமர் கோவில் அறக்கட்டளை வாங்கிய நிலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை மறுப்பு தெரிவித்துள்ளது.
அறக்கட்டளையின் பொதுச்செயலாளரும், விஷ்வ இந்து பரிஷத்தை சேர்ந்தவருமான சம்பத் ராய் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் "அயோத்தியில் ஏற்கனவே உள்ள குழந்தை ராமர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை விரிவுபடுத்துவதற்காக அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கி வருகிறோம். போக்குவரத்து எளிதாக இருப்பதற்காக, கோவில் வளாகத்தை சுற்றியுள்ள நிலம் தேவைப்பட்டது. அதற்காக வீடுகளும், சிறு கோவில்களுமாக இருந்த அந்த நிலத்தை வாங்கினோம். அங்கு வசித்தவர்களை வேறு இடத்தில் குடியமர்த்துவதற்காக, அயோத்தியில் பாக் பிஜைசி என்ற இடத்தில் உள்ள 12 ஆயிரத்து 80 சதுர மீட்டர் நிலத்தை அறக்கட்டளை வாங்கியது.
அந்த நிலத்துக்கு ரூ.2 கோடியே 16 லட்சம் விலை என்ற அடிப்படையில், 2017 ஆம் ஆண்டு முதல்கட்ட ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. முன்பணமாக ரூ.92 லட்சம் கொடுக்கப்பட்டு இருந்தது. அது, 2017- ஆம் ஆண்டின் சந்தை விலை அடிப்படையில் மதிப்பிடப்பட்ட விலை என்பதால் குறைவாக இருந்தது. அப்போது, ராமர் கோவில் கட்ட அனுமதிப்பதற்கான உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரவில்லை. அந்த தீர்ப்பு, 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி வெளியானது. அதன்பிறகு நிலத்தின் மதிப்பு ஏறக்குறைய 10 மடங்கு கூடிவிட்டது. அதனால்தான், கடந்த மார்ச் மாதம் அந்த நிலத்தை ராமர் கோவில் அறக்கட்டளை வாங்கியபோது, விலை 9 மடங்கு அதிகரித்துவிட்டது.