ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுவந்த சட்ட பாதுகாப்பை விலக்கி மத்திய அரசு அதிரடி!

Update: 2021-06-16 12:43 GMT

 இந்தியா அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப விதியை ஏற்பதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க கோரி ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசுக்கு  கோரிக்கைவிடுத்தது. இதனையேற்று கொண்டு சில நேரம் கால அவகாசம் அளித்தும், இன்று வரை ட்விட்டர் நிறுவனம் புதிய விதிகளை ஏற்க்கவில்லை. இதனால் ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளது. இதனையடுத்து, உத்திரபிரதேசத்தில்  முஸ்லிம் நபரை தாக்கும் வீடியோவை ட்விட்டர் நிறுவனம் நீக்காததால், அந்நிறுவனத்தின் மீது உத்திரபிரதேச காவல் துறை  வழக்குப்பதிவு செய்துள்ளது.


இன்று வரை ட்விட்டர் நிறுவனம் இந்தியாவின் விதியை ஏற்காததால் சமூகவலைதளங்களுக்கு இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் சட்டரீதியிலான பாதுகாப்பை ட்விட்டர் நிறுவனம் இழந்துள்ளது. இந்த பாதுகாப்பை இழந்ததால், ‛இடைநிலை தளம்' (Intermediary Platform) என்ற அந்தஸ்தையும் ட்விட்டர் நிறுவனம் இழக்கிறது. இதன் மூலம் பயனாளர்களால் பதிவிடப்படும் சர்ச்சைக்குரிய கருத்துகள், புகைப்படங்கள், வீடியோக்களுக்கு பயனர்கள் மட்டுமல்லாமல் இனி ட்விட்டர் நிறுவனமும் பொறுப்பாகும். இதன்மூலம் சட்டரீதியிலான நடவடிக்கைகளை ட்விட்டர் நிறுவனம் சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.


இதற்கிடையே, கடந்த ஜூன் 5ம் தேதி, உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில், முஸ்லிம் நபர் ஒருவரின் தாடி அகற்றப்பட்டு வந்தே மாதரம் மற்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லச் சொல்லி அவரை ஒரு கும்பல் தாக்கிய வீடியோ ட்விட்டரில் வெளியாகி இருந்தது. இது தவறான தகவல் எனக்கூறி அந்த வீடியோவை நீக்குவதற்கு ட்விட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் அதை ட்விட்டர் நிர்வாகம் ஏற்க்கவில்லை. தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் மீதான சட்ட பாதுகாப்பை மத்திய அரசு விலக்கியதை அடுத்து, தவறான வீடியோவை நீக்கவில்லை என ட்விட்டர் நிறுவனம் மீது உத்திரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் "ட்விட்டர் நிறுவனம், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. அந்த நிறுவனத்திற்கு பல முறை வாய்ப்பு வழங்கப்பட்டும், இந்திய சட்டங்களை மதிக்கவில்லை." என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News