மேகதாது அணையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கலைப்பு : தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடியில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு, அதை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. அந்த வழக்கில், அணை கட்டும் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை கலைத்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கை முடித்து வைத்துள்ளது.
மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் மூலம் பெங்களூரு மாநகரின் குடிநீர் பயன்பாட்டுக்கு 4.75 TMC நீரை கொண்டு செல்லவும், அந்த அணையில் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த அணை கட்டுவது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு வழக்கு பதிவு செய்து, மேகதாது அணை திட்டம் செயல்படுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வல்லுநர் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு, கர்நாடக அரசு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள அமைச்சகங்கள் ஆகியவை பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கர்நாடக அரசு சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வின் உத்தரவை திரும்பப் பெறக்கோரும் சீராய்வு மனு தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்த விசாரணை வந்தபோது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி கோரி கர்நாடக அரசு சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தில் அளிக்கப்பட்ட மனு நிலுவையில் உள்ளது. அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. எனவே, பசுமை தீர்ப்பாயத்தில் இந்த வழக்கை விசாரித்தால் குழப்பம் ஏற்படும். எனவே, இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்" என்றார்.
இதனை ஏற்றுக்கொண்ட அமர்வின் தலைவர் ஏற்கனவே மேகதாது அணை தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை கலைக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.