தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் இந்தியாவில் வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால் கொரோனாவின் மூன்றாவது அலை வெளிநாடுகளில் தொடங்கியுள்ளதாகவும் இன்னும் சில மாதங்களில் அது இந்தியாவிற்கும் வரவுள்ளதாக மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுவதாக காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் அறிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகையில் ஆண்டுதோறும், ஜூன் இறுதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை, பனியில் சிவலிங்கம் உருவாகும். இந்த பனிலிங்கத்தை தரிசிக்க, நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரையை ரத்து செய்ய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை ரத்து தொடர்பான அறிவிப்பை ,காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று வெளியிட்டார். மேலும், பக்தர்கள் வீட்டில் இருந்தபடி தரிசிக்க, அமர்நாத் பனி லிங்கத்திற்கு காலை மற்றும் மாலை வேளையில் நடத்தப்படும் சிறப்பு பூஜைகளை,தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அதிகாரிகளுக்கு, அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.